Saturday, September 29, 2007

கரை படிந்த கைகள்.




கரை படிந்த கைகள். ஹூயூகோ. ழான் பால் சார்டின் தத்துவங்கள் எனக்கு மிக விருப்பமானவை. Postmodernism எனப்படும் பின்நவீனத்துவத்தின் ஆரம்ப கட்டத்தில்- 1945ல் - அமைந்த அவரின் எண்ணங்கள் சற்றே ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை. Existentialism என்ற தத்துவக் கோட்ப்பாடு அவர்க்கு உரித்தானதாகும். Being and Nothingness என்னும் புத்தகத்தை அவர் எழுதிய அதே ஆண்டில் தான் மூன்று முக்கியமான நாடகங்களையும் எழுதினார். அவை அடங்கிய நாடகத் தொகுப்பை (Huis clos, Les mouches, Les Mains sales , La Putain respectueuse) சமீபத்தில் நான் வாங்கினேன். . Being and nothingness புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பே வாங்கிவிட்டு ஐம்பது பக்கத்திற்கு (மொத்தம் 700 பக்கம்) மேல் முன்னேறாமல் பத்திரமாக எனது அலமாரியின் மதிப்பிற்குரிய மூலையில் வைத்திருக்கிறேன்.

கரை படிந்த கைகளுக்கு- Les Mains salesல் தான் இன்றைய தூண்டுதல் இருப்பதனால் அதற்கு வருவோம்.
ழான் பால் சார்ட்
அதில் ஒரு கட்டத்தில் ஹூயூகோ தான் கொல்ல வந்திருக்கும் ஹோடரரிடம் விரிவான வாக்குவாததில் ஈடுபடுவான். ஹூயூகோ அவன் இயக்கத்தின் கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். பாட்டாளிக்கும் பாமரனுக்கும், உழவனுக்கும் ஆதரவாக போராடி; வகுப்பு பேதங்களற்ற ஒரு சமுகத்தை உருவாக்குவதையே குறிக்கோளாக கொண்டு அதற்கு ஆயுதப் புரட்சியில் ஈடுபடும் ஒரு மறைவான இயக்கம் அது. ஆனால் ஹூயூகோவின் பணி எழுதுவது மட்டுமே. தானும் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு கொள்கைக்காக எதாவது செய்யவேண்டும் என்பது அவனது ஆசை. ஆனால் மற்றவர்களை போல் உடல் பலமில்லாததனாலும், அத்தகைய வேலையின் தேவைக்கு அதிகமாக சிந்திக்கும் அறிவையும் பெற்றிருப்பதனால்- இயக்கத்தின் ஏட்டை வெளியிடும் ஒரு மந்தமான வேலையில் இருந்தான். ஹோடரர் அவ்வியக்கத்தின் தளபதிகளில் ஒருவர். கருத்து வேற்றுமை காரணமாக அவரை கொல்ல விரும்பும் லூயி (ஹூயூகோவின் சீனியர்/ தலைவன்), அவரது கருத்துக்களும் செயல்களும் இயக்கத்தின் கொள்கைக்குக் முரணாக அமைகிறது எனவும், நடந்து வரும் புரட்சிக்கு பேரழிவு ஏற்படுத்திவிடும் என்றும் காரணங்களைக் கூறுகிறான். ஹூயூகோ ஆர்வப்பட்டு, இது தான் தன் வாய்ப்பு என, ஹோடரைக் கொல்ல முன்வருகிறான். திட்டப்படி அவரது உதவியாளானாக வேலைக்குச் சேருகிறான்.

ஹூகோவின் செயல்கள் எனக்கு பழக்கமானவையாக தெரிகின்றன.
ஒரு கொள்கை ஏதுமின்றி குழம்பித்திரியும் காலம். பிறகு ஒரு கொள்கை வசப்படும் காலம். அதன் உண்மைகளை அறிந்துகொண்டு அதற்காக எதையும் செய்யத்துடிக்கும் காலம்.இந்த சமயத்தில் ஒரு கொள்கையிடம் முழுமையாக வசப்படுவதால், எந்த கொள்கைக்கும் அது இயக்கமாக உருவாகும் பொழுது ஏற்படும் விரிசல்கள், தனிமனிதர் தலையீட்டால் ஏற்படும் ஈகோ பிரச்சினைகள், ஒரு காரியத்தில் இறங்கும் போது கடிவாளம் கட்டிய குதிரை போல் இருப்பது, சூழல்களை கவனியாது செயல்படும் முரட்டுத்தனம், போன்றவைகளை உணராது ஹூயூகோ லூயி சொல்வதை ஏற்றுக்கொள்கிறான். இவ்வாறு தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட வாக்கினால் பின்னர் ஹேடரரிடம் வாதம் செய்யும் போது எப்படியானாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்குத் முன்னர் தோன்றிறாத, தான் கொள்கை வசப்படும் போது சிந்தனையில் வராத வாதங்கள், எடுத்துக் சொல்லாத நியாயங்கள் இத்தனையையும் ஹோடரரிடம் வாதத்தில் இருக்கும் யதார்த்த உண்மைகளை எதிர்க்க பிடிவாதமாக பயன்படுத்துகிறான்.. அத்தனையும் மீறி அவரது யதார்த்தங்கள் வலுப்பெறவும், இவனது வாதங்கள் அடிப்படை இழக்கவும், கடைசியில் தலைவன் தொண்டனிடம் எச்சமயத்திலும் பொய் சொல்லக்கூடாது என்ற அடிப்படை வாதத்தை கையாண்டு தனது வாதத்தை நியாயப்படுத்துகிறான். அவனது மனைவி பின்னர் “உண்மையில் அவர் சொல்வது சரியாகப் படுகிறது என்று தனிமையில் கூறும் போதும் அவன் விட்டுக்கொடுப்பதாயில்லை.

ஒரு கொள்கையை பிடித்துக்கொள்வது. அது எல்லா முரண்களுக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று கூறிக்கொள்வது. பின்னர் அதற்கு ஒரு எதிர்ப்பு வரும் பொழுது எப்பாடுபட்டாவது அதனை காப்பாற்றுவது. கடைசியில் கொள்கையை காரணமாக்கி தான் நியாயப்படுத்திக்கொள்வது.அதுவாக சாகும் நிலை வந்தாலும் பிடிவாதமாக உயிர்பித்துக் கொள்வது. மனிதன் கொள்கைக்காக, கோட்பாடுக்காக அது ஏற்படுத்தும் நன்மைக்காக அதனை ஏற்றுக்கொள்கின்றானா அல்லது தனது எண்ணங்களுக்கு வழி விட , தன் மனதில் கொள்கை என்னும் வெற்றிடத்தை நிரப்ப ஒரு கொள்கையைத் தேர்வு செய்கின்றானா என்பது புரியவில்லை. எனது கார், எனது பைக், நான் டை கட்டும் விதம், நான் வைனையும் வோட்காவையும் கலக்கும் விகிதம் என்பது போல... என் கொள்கை- அதற்காக நான் உயிரையும் கொடுப்பேன் தெரியுமா? என்று சொல்லிவிடுவார்களோ?

கதையில் இந்த விவாதங்களுக்கு பின்னர் நடை பெறுவது சுவையாகவும்- கொள்கைகள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதையும் சரியாக காட்டுகிறது.. ஹூயூகோ ஹோடரரை சுடும் எண்ணத்தை முற்றிலுமாக கைவிட்டு, அவர் செயலிலும் பேச்சிலும் உண்மை இருப்பதை ஒப்புக்கொண்டு அவருடன் இருப்பதால் தானும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் புரிந்து கொண்டு சுடும் எண்ண்த்தை கிட்டத்தட்ட விட்டு விடுகிறான். ஆனால் ஒரு அற்ப காரணத்தினால் உந்தப்பட்டு ஹூயூகோ ஹோடரரைக் கொல்கிறான். ஹோடரரின் எண்ணங்களிளும் அவரிலும் மயங்கிய ஜெஸ்சிகாவை – ஹூகோவின் மனைவியை- ஹோடரர் முத்தமிடும் போது ஹூகோ அவரை சுட்டு விடுகிறான். இந்த காட்சியை கண்ட பின்னர் சட்டென்று கடமையை நிறைவேற்ற காரணம் சிக்கியது போல்- சுட்டு விடுகிறான். பின்னர், பல வருடங்க்ளுக்கு பிறகு- சிறையிலிருந்து வெளிவந்த பின்னர்- ஹோடரரின் எண்ணத்ததையும் திட்டததையும் இயக்கம் கச்சிதமாக நிறைவவேற்றியிருப்பதை கண்டு மனம் வெறுக்கிறான். அவனிருந்தால் ஆபத்து- தற்போது வீரராக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஹோடரரின் சாவில் இருக்கும் உண்மகளை வெளியிட்டு விடுவான் என்று அவனை கொல்லத்துடிக்கும் இயக்கத்தினரிடம் அவனே சிக்கிக்கொள்கிறான்.

திருவனந்தபுரம். கேரள அரசின் இயற்கை வேளாண்மை கொள்கைக் குறித்த ஒரு சந்திப்பு இந்த கதைக்கு இடையே நடைபெற்றது. அங்கு என்னுடைய ‘அளவில்லா’ சேவைகளையும் ‘பொருத்தமிக்க’ இருத்தலையும் உணர்ந்து நொந்தது.

ழான் பால் சார்ட், பாரீசில் ஒரு குளம்பியகத்தில் எந்நேரமும் பாலில்லா குளம்பியோடு காலந்தள்ளினார் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் நானும் “கபே காபி டேவில்” மாக்கியாட்டோ துணையோடு...

பசுமைசெய்



No comments: